வெள்ளி, 21 மார்ச், 2014

விழியில் சொரியும் அருவிகள் -எமை

1995 இன் தொடக்கத்தில் தற்காலிக யுத்தநிறுத்தமொன்று வந்து சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதைவிட அரசால் அனுப்பப்பட்ட தூதுவர்களுடன் பொழுதுபோக்காகக் கதைத்தார்கள் என்று சொல்லலாம்.
பின் பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்தது. வடபகுதி மீதான பொருளாதாரத்தடையைக்கூட நீக்க அரசு முன்வரவில்லை. இந்நிலையில் புலிகள் போரைத் தொடக்கினர்.
அது மூன்றாம்கட்ட ஈழப்போர் என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசபடைக்கு பெரியதொரு அழிவை ஏற்படுத்திய தாக்குதலோடு அப்போர் தொடங்கியது.

திரு(க்)கோணமலைத் துறைமுகத்தில் நின்ற மூன்று கடற்கலங்களை அழித்து அப்போர் தொடங்கப்பட்டது.
அக்கலங்களை அழித்து வீரச்சாவடைந்தவர்கள் நீரடிநீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலிகளான
மேஜர் தணிகைமாறன்,
மேஜர் கதிரவன்,
மேஜர் மதுசா,
கப்டன் சாந்தா.

இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலே இது.
மேஜர் சிட்டுவின் உருக்கமான குரலில்
 இப்பாடல் வெளிவந்துள்ளது.


விழியில் சொரியும் அருவிகள் -எமை
விட்டுப்பிரிந்தனர் குருவிகள்
பகைவன் கப்பலை முடித்தனர் -திரு
மலையில் வெடியாய் வெடித்தனர்.
தம்பி கதிரவன் எங்கே
தணிகை மாறனும் எங்கே
மதுசாவும் எங்கே
தங்கை சாந்தா நீ எங்கே

தாயின் மடியினில் அங்கே -கடல்
தாயின் மடியினில் அங்கே

பாயும் கடற்புலியாகி வெடியுடன்
ஏறி நடந்தவரே -உங்கள்
ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக
கொடுத்தவரே
தமிழ் ஈழம் உமை மறக்காது
பகை கோண மலையிருக்காது

வேகமுடன் பெருங்கோபமுடன் பகை
வீழும் வெடியெனவானீர்
பிரபாகரன் எனும் தீயின் விழிகளும்
ஈரம் கசிந்திடப் போனீர்
விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி
வேகத்தில் கப்பல் விரிந்தது

நீரின் அடியினில் நீந்தி பகைவரை
தீயில் எரித்துவிட்டீரே -அவன்
ஏவும் கப்பல்கள் ஏறி வெடித்துமே
ஈழம் மலர வைத்தீரே
வாயில் சோகத்தின் ராகங்கள் -எங்கள்
வாசலில் துயர்க் கோலங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக